1.2.3.4.5.6.7.8.

Posted on June 27, 2007. Filed under: அனுபவம், இணைய கலாச்சாரம், கொஞ்சம் பெரிய பதிவு, ரோசனை, வாழ்க்கை |

ஐகாரஸ் பிரகாஷ் என்பார் தாம் தொடங்கிவைத்த ஆட்டத்திலே என்னையும் பங்கேற்றிட அழைத்துள்ளார். அவர் கூறுகின்ற ஒருவர் தமது பெருமைகளாகத் தாம் கருதுவனவற்றுள் எட்டினைப் பட்டியலிட வேண்டுமெனவும், அப்பட்டியலினடியில் அவ்வாட்டத்திலே பங்கேற்கவென மேலும் எட்டுப் பேரினைப் பட்டியலிட்டழைத்திட வேண்டுமெனவும் அப்பெயர்ப் பட்டியலினடியில் ஆட்ட விதிகளைக் குறிப்பிட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இவ்வழைப்பை முன்னிட்டு நான் வெளியிடும் பட்டியல் பின்வந்திடுமாறு:

1. இரண்டு முறை ரேடியோவில் குரல் ரீதியாகத் தோன்றியிருக்கிறேன். ஏழாவது/எட்டாவது படிக்கும்போது சென்னை வானொலியின் ‘சிறுவர் சோலை’ நிகழ்ச்சியில் ‘சிறுவர் நாடக விழா’வுக்காக ‘காணாமல் போன கண்மணிகள்’ என்ற நாடகத்தில் வீட்டை விட்டு ஓடிப்போகும் நான்கு சிறுவர்களில் ஒருவனாக நடிப்பு. இயக்கியவர் அன்றைய வானொலி அண்ணா கூத்தபிரான். இன்னொரு நிகழ்ச்சியில் பாடியும் இருக்கிறேன் (சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சிப் பாடல்).

2. 2001 வாக்கில் தளையறு மென்பொருள்காரர் ரிச்சர்ட் ஸ்டால்மனுடன் மின்னஞ்சல் மூலம் ஒரு குட்டிக் கலந்துரையாடல் நடத்தினேன். Thread பாதியில் அறுந்துபோனது. Free software என்பதற்கு இணையான தமிழ்ச் சொற்றொடரை அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். ‘இலவச மென்பொருள்’ என்றுதான் சொன்னேன். ஆனால் எனக்கே அதில் திருப்தி இல்லை. ‘தளையறு மென்பொருள்’ என்றும் சொன்னேன் (அதற்கு முன் அந்தச் சொல்லாக்கத்தை நான் கேள்விப்பட்டதில்லை. அது அப்போதே இருந்ததா என்றும் தெரியவில்லை). இதற்குத் தீர்வு கிடைக்கவில்லை. திடீரென்று பார்த்தால் என் இன்பாக்ஸில் ரிச்சர்ட் ஸ்டால்மன். அவருக்குத் தளையறு மென்பொருள் பிடித்தது. அதுதான் சரியான மொழிபெயர்ப்பு. ஆனால் free என்ற வார்த்தை ஆங்கிலத்தில் சகஜமாக இருப்பது போல் ‘தளையறு’ என்பது தமிழில் இல்லை. எனவே அது முற்றிலும் தகுந்த மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. இது இழுபறியாகப் போய்க்கொண்டிருந்ததால் அவர் ‘இந்த முக்கு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்’ என்று சொல்லாத குறையாக மறைந்துவிட்டார்.

3. மொழிபெயர்ப்பில் நான் advanced beginner என்று நம்புகிறேன். நிபுணர்களாக அறியப்படும் சிலரது மொழிபெயர்ப்புகளில் பெரிய தவறுகளைக் கண்டுபிடித்தால் நிபுணர் இல்லையென்றாலும் advanced beginnerதானே?

4. இணையவழி காதலைக் கருவாக வைத்துக் கதை எழுதிய முதல் ஆள் நான்தான் என்று நினைக்கிறேன். 14 கதைகள் எழுதினேன். எல்லாமே பிரசுரிக்கப்பட்டன. கொஞ்சம் பேர் படித்தார்கள். அதே மாதிரி முதல் சைபர் க்ரைம் கதையும். ஐட்டம் 5ஐ இதோடு நிறுத்திக்கொள்கிறேன்!

5. அரிய புத்தகங்களைச் சேகரிக்கும் பொழுதுபோக்கு முன்பு எனக்கு இருந்தது. 1870களில் வெளிவந்த ஒரு திருக்குறள் பதிப்பு, 1906இல் வந்த ‘திருத்தணிகைச் சந்நிதி முறை’, 1936இல் வந்த புகழேந்திப் புலவர் வாழ்க்கை வரலாறு, 1930களில் வந்த ஒரு தலகாணி சைஸ் வைணவப் பத்திரிகைத் தொகுப்பு, ‘50களில் வந்த ஒன்றிரண்டு நாவல்கள் என்று சில பழைய தமிழ்ப் புத்தகங்களை வைத்திருக்கிறேன். என்னுடைய பிரதான பொழுதுபோக்கு, இரண்டாம் உலகப் போர் பற்றிய புத்தகங்களைச் சேகரிப்பது. இந்த வகையறாவில் மிக அரிய புத்தகங்கள் சில என்னிடம் இருக்கின்றன. எ.கா.: க்வாய் ஆற்றுப் பாலம் கட்டிய போர்க் கைதிகளில் ஒருவர் தன் அனுபவத்தை எழுதிய புத்தகம், அவர் கையெழுத்துடன்; முதலாம் உலகப் போரின்போது மக்களின் பாலியல் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் (2ஆம் உ.போ.க்கு முன்பு வெளிவந்தது); 2ஆம் உ.போ. காலகட்டத்தில் வந்த நேச நாட்டுப் பிரச்சாரச் சிறுபுத்தகங்கள் (booklets); நாஜி காலத்து ஜெர்மன் அஞ்சல் தலைகள்; முதல் உலகப் போரை அடுத்து ஜெர்மனியை ஆட்டிவைத்த பணவீக்கத்தின்போது அச்சிடப்பட்ட நாட்கெல்டு நோட்டுகள் (சில மில்லியன்கள் இருக்கும்); பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கான Victory என்ற பத்திரிகை. பிறகு சத்திய சோதனையின் முதல் ஆங்கிலப் பதிப்பு, 1927இல் வெளிவந்தது (அந்த வருடம் எடுக்கப்பட்ட காந்தி போட்டாவுடன், அட்டை இல்லாத நிலையில்). Pears Cyclopedia 1936, 1938 ஆண்டுப் பதிப்புகள். இன்னும் கூட சொல்லலாம்! தமிழ்ப் புத்தகங்களை ரோஜா முத்தையா நூலகத்திற்கு அனுப்பத் திட்டம்.

6. நீங்கள் வைத்திருக்கும் நோக்கியா ஃபோனில் தமிழ் இடைமுகம் இருக்கிறதா? ஆம் எனில் அதில் கணிசமான ஒரு பகுதி என் மொழிபெயர்ப்பாக இருக்கலாம். நான் சில ஆயிரம் string-களைத் தமிழாக்கியிருக்கிறேன். அது ஒரு பயங்கர அனுபவம்…

7. நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் ஒரு தேசிய நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒன்று கவர் ஸ்டோரி.

8. என் பாணியில் வேறு யாரும் எழுதுவதில்லை.

8அ. எனக்கு Time பத்திரிகை பிடிக்காது என்றாலும் அவர்கள் 2006இன் Person of the Year-ஆக என்னை அறிவித்தார்கள்.

விளையாட்டின் விதிகளாவன:

1. ஆடுபவர் தன்னைப் பற்றி 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுத வேண்டும்.

2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தர வேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும் விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.

மூன்றாம் விதிப்படி நான் அழைக்கும் எண்மர்:

1. கட்டியக்காரன் – வடக்கு மாசி வீதி

2. செ.ச. செந்தில்நாதன் – அறம் பொருள் இன்பம்

3. பாஸ்டன் பாலா – எண்ணிலடங்கா வலைப்பதிவுகள்

பின்வருவனவற்றை ஸ்லாஷ்டாட்டின் Cowboy Neal!-ஆகப் பாவியுங்கள்:

4. ராபர்ட் ஸ்கோபிள் – ஸ்கோபிளைஸர்

5. டேவ் பேரி – டேவ் பேரீஸ் பிளாக்

6. வில்லியம் கிப்சன்

7. ஸ்காட் ஆடம்ஸ் – த டில்பர்ட் பிளாக்

8. உடி ஆலன் (Woody Allen)

வலைப்பதிவு எழுதுவதை எப்போதுமே ஒரு performance-ஆகக் கருதுகிறேன். நாம் ஒரு பெரிய மேடையில் இருக்கிறோம் என்ற உணர்வோடு பலரும் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. இந்த மீம் அதை வெளிப்படையாகச் செய்யவைத்திருக்கிறது.

Make a Comment

Make a Comment: ( 11 so far )

blockquote and a tags work here.

11 Responses to “1.2.3.4.5.6.7.8.”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

//அவர் கூறுகின்ற ஒருவர் தமது பெருமைகளாகத் தாம் கருதுவனவற்றுள் எட்டினைப் பட்டியலிட வேண்டுமெனவும், …………….. இவ்வழைப்பை முன்னிட்டு நான் வெளியிடும் பட்டியல் பின்வந்திடுமாறு://

ஏதாவது கெவர்மண்டார் தாபனத்தில் கொஞ்ச நாள் குப்பை கொட்டினீர்களோ? :-)

//அரிய புத்தகங்களைச் சேகரிக்கும் பொழுதுபோக்கு முன்பு எனக்கு இருந்தது. //

சேம் ப்ளட்

//நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் ஒரு தேசிய நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒன்று கவர் ஸ்டோரி//

க்ளூ பற்றாது :-)

//எனக்கு Time பத்திரிகை பிடிக்காது என்றாலும் அவர்கள் 2006இன் Person of the Year-ஆக என்னை அறிவித்தார்கள்//

அட இது போதாதான்னு விழுந்தடிச்சுகினு ஓடி கூகிளைத் தட்டி, பின்னர் தலையைத் தடவிக் கொண்டு வழிகிறேன் :-) . வெரி க்ளெவர்..

நன்றி.

// ஏதாவது கெவர்மண்டார் தாபனத்தில் கொஞ்ச நாள் குப்பை கொட்டினீர்களோ? :-) //

நான்தான் பழைய தமிழ்ப் புத்தகங்கள் வைத்திருப்பதாகச் சொன்னேனே. பழசு ஏன், இப்போதே பல பேர் அப்டேட் ஆகாமல்தான் இருக்கிறார்கள்.

// க்ளூ பற்றாது :-) //

வாக்காளர் அடையாள அட்டை வேண்ணா ஸ்கேன் பண்ணிப் போடவா?

கூப்பிட்டமைக்கு நன்றி!

சாத்தான்,
பதிவுக்குத் தொடர்பின்றி.. இதை இணைய கலாச்சாரத்தில் சேர்த்திருக்கிறீர்களே! இவ்வளவு நாள் கம்ப்யூட்டர், வீடியோ, கூகிள் என்று இணைய நுட்பங்களாக எழுதியதால் இந்த குறிச்சொல் ஓடையை நுட்ப விவரங்கள் திரட்டப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்… அதுக்குன்னு தனியா ஏதும் குறிச்சொல் இருக்கா?

அனைத்தும் நன்று.

//”எனக்கு Time பத்திரிகை பிடிக்காது என்றாலும் அவர்கள் 2006இன் Person of the Year-ஆக என்னை அறிவித்தார்கள்”//

இதுதான் மிக அருமை. ]
நல்ல presentation

பொன்ஸ், வருகைக்கு நன்றி! பதிவின் கடேசி பாரா எனது குறிச் சொல் பயன்பாட்டை விளக்குகிறது என்று நினைக்கிறேன். இணையக் கலாச்சாரத்திற்குப் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் நான் இருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான் இதைச் செய்தி போல ‘இணைய கலாச்சாரம்’ என்ற tag-இல் சேர்த்திருக்கிறேன். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்! :-)

சிவராமன்ஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

interesting! :)

//8அ. எனக்கு Time பத்திரிகை பிடிக்காது என்றாலும் அவர்கள் 2006இன் Person of the Year-ஆக என்னை அறிவித்தார்கள்.//

ஆமா. என்னைப்பத்தி இப்படி சொல்லிட்டாங்களேன்னு நானும் ஃபீல் பண்ணினேனாக்கும். ;) போட்டோ அவ்வளவு திருப்திகரமா வரல. ;(

-மதி

பொன்ஸின் பின்னூட்டமும் அதற்கு சாத்தானின் பதிலும் சுத்தமாக விளங்கவில்லை. விளக்கவும் ப்ளீஸ்.

மதி: 8அ-வில் இதுதான் பிரச்சினை. எல்லாரும் வந்துவிடுகிறார்கள், நான்தான், நீதான் என்று! :-)

கட்டியக்காரன்: பொன்ஸும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவு நடத்துகிறார்கள். அதில் தொழில்நுட்பம் தொடர்பான மேட்டர்களை tag வைத்துத் திரட்டுகிறார்கள். ஒரு பதிவுக்கு iPod என்று tag வைத்தால் அது ஆட்டோமாட்டிக்காக அவர்கள் வலைப்பதிவின் சைடுபாரில் இருக்கும் feed திரட்டியில் ஒரு ஐட்டமாகத் தெரியும். இந்தப் பதிவுக்கு ‘இணைய கலாச்சாரம்’ என்ற tag கொடுத்ததால் இதுவும் அதில் வந்துவிட்டது. அதனால்தான் அந்தக் கேள்வி. என் பதில் அவருக்குப் புரிந்திருக்குமா என்று எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

இல்லீங்க.. தெளிவா இருக்கு ;) நன்றி :) ))

ஆனா, ipodனு tag வச்சா திரட்டுவது மாதிரி இன்னும் செய்யவில்லை.. சோதனை ஓட்டத்தில் இருக்கு.. அந்த மாதிரி எல்லா விதமான குறிச்சொற்களையும் சேர்த்து திரட்ட சாத்தியப்படுமான்னு இனிமேல் தான் பார்க்கணும். இப்போது பாதிக்கு மேல் மனிதத் தலையீட்டால் தான் திரட்டப்படுகிறது.

இந்த தீம் சுத்தமாக நன்றாக இல்லை. தயவு செய்து மாற்றிவிடுங்கள்.

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நானும் மூன்று, நான்கு தீம் மாற்றிப் பார்த்தேன். எதுவும் அனலோரிக்கு* ஒத்துவரவில்லை. மீண்டும் மாற்றப் பார்க்கிறேன்.

* சந்தடி சாக்கில் தமிழ்ச் சேவை. Firefox-ஐ தமிழ்த் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு மரபுப்படி பழந்தமிழில் புரியாமல் ஆக்கியிருக்கிறேன்.


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,404 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...