எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள் (கதை)

Posted on March 11, 2007. Filed under: அனுபவம், இலக்கியம், கொஞ்சம் பெரிய பதிவு, சிறுகதை |

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும். பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை எனவும் அது பர்மாவில் நிகழ்ந்தது எனவும் ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை எனவும் அது பின்லாந்தில் நிகழ்ந்தது எனவும் இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் என வேறொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.

பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில், குறிப்பாக பாரீஸ் நகரில் இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்கவேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 16 மணி நேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஜெர்மானிய மகாகவி கதேயின் நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் உலகப் பிரசித்தி பெற்றது. நூற்றாண்டு விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.

நான் இருந்த விடுதியான ‘பலெ த்ராத்வார் த பாரி’ (Palais Trottoir de Paris) மூந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாகவும் விவாதத் தலமாகவும் அது இருந்தது. புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். ஆர்க் த திரியோம்ப், முலான் ரௌஜ் போன்ற இடங்களில் நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன்.

புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ (Bistro) ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (‘பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. அதில் புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்த பிஸ்த்ரோ இருந்த தெருவின்வழியே வருகிறது என்பதும் எனக்குப் புரிந்தது.

எனது வாழ்நாள்க் காலத்தில் ஒரு தெருச் சண்டையைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாமல் நான் குழம்பி நிற்கையில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை உயரத்திலிருந்து பார்க்கலாமென மாடிக்கு ஓடினேன். அங்கு சுமார் இருநூறு பேர் பழைய புத்தகங்களையும் நாளேடுகளையும் பத்திரிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மாடியில் இடமின்றி நான் உடனடியாக முதல் தளத்திற்குச் சென்றேன்.

முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் புரட்சி வெடித்ததற்கான காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் வறுமையும் சீர்திருத்தமின்மையும் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். வால்டேர், ரூஸோ, திதரோ போன்ற சிந்தனையாளர்களும் மக்கள்நலப் பணியாளர்களும் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்ற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.

ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் சேர்த்தபடி அரண்மனை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய – புரட்சியாளர்களுடைய – வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி என்றைக்கும் சாத்தியமானதில்லை என்று ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது எனது நினைவில் தோன்றி மறைந்தது.

நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே தொடர்ந்து வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்காகவென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் சொன்னார். அரண்மனையிலிருந்து திரும்பிவந்தபடி இருந்த ஒரு புரட்சியாளர் கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருள் எனக்குச் சென்னை வந்த பிறகே தெரிந்தது.

புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சிக்காரர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் -

வத்திக் குச்சி பத்திக்காதுடா – யாரும் வந்து ஒரசுற வரையிலே
வம்பு தும்பு வச்சுக்காதுடா – யாரும் வந்து மெரட்டுற வரையிலே
(வத்திக்குச்சி)

வத்திக்குச்சி (தீக்குச்சி) தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து ஒரச வேண்டும். வருவது மிக முக்கியம். ஒரசுதல் என்றால் உரசுதல். வத்திக்குச்சி வம்பு தும்பு (வம்பு தும்பு) வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து ‘மெரட்டுற’ (மிரட்டும்) வரையில். ஒரு புரட்சியாளனின் மனமும் ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:

“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்ப காலத்துக்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்து நிறுத்திவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”

வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் கிட்டத்தட்ட வால்டேரின் கருத்துடன் ஒத்துப் போகிறது:

“I am liking the French revaloosan. It is good for all public people. All public people needing money. Queen is telling why not eat bun butter jam? That lady is fooling, you understand? Public is very angry. Yes, really very very angry. If public is angry, you French kingdom people better pack up. You are no use.”

இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகியிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஒரு இளைஞன் ஆவலுடன் என்னிடம் வந்து “சுக்குக் காபி வேண்டுமா சார்” என்றான். ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு நிச்சயம் அன்று உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.

Make a Comment

Make a Comment: ( 6 so far )

blockquote and a tags work here.

6 Responses to “எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள் (கதை)”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

பிரெஞ்சுப் புரட்சிக் குறித்த உங்கள் கதைப் பதிவு அருமை. எனக்கு பிரான்சில் நாகராஜன் என்றொரு நண்பர் இருக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தால், அவர் ஒரு அ-புரட்சியாளர் என்றே தோன்றுகிறது. அவரது கதி என்னவானது என்று தெரியுமா? உங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

போங்கப்பு, போயி அடுத்த பதிவ ரெடி பண்ணுங்கப்பு!

மிகவும் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தேன்.கடைசியில் நகைச்சுவையாக முடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பாதை மாறி விட்டது.தங்கள் நினைத்திருந்தால் ஒரு அருமையான வரலாற்றுப் பதிப்பை நாங்கள் பெற்றிருப்போம்.ஆனாலும் மிக்க நன்றி.தங்களின் இந்த அருமையான பதிவிற்கு.
jeevaflora

நன்றி ஜீவாஃப்ளோரா. முதல் வரியிலிருந்தே எனது நோக்கம் நகைச்சுவைதான். எனக்கு வரலாறெல்லாம் தெரியாது!

good wraiting your franch revalution.sir piease
wrait french revalution in womens leadet

அன்பின் ஜெயேந்திர செல்வம், தாங்கள் என்னை ஊக்குவிப்பது போல் தெரிகிறது. நன்றி.


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,454 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...