வாழ்க்கையின் அர்த்தம்… (கதை)

Posted on October 3, 2006. Filed under: சிறுகதை |

நான் எழுதிப் பிரசுரமான முதல் கதை.

வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த ஒரு புரிதலை நோக்கி…

‘டிக் டிக் டிக்’ என்று ஓடாத கடிகாரங்கள் சப்திக்காத இரவு. மழை கொட்டுகிறது. வானத்திலிருந்து பூமியின் மீது மழை கொட்டுகிறது – பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்தால் மழை நீர் தேங்க வானத்தில் மண் இல்லை என்று. மழை எதன் மீது பெய்தால் என்ன? எருமை மாட்டின் மீது பெய்வது போலத்தானே? நனைந்துவிடுவோம் என்று பூமி அஞ்சி நகர்ந்து பக்கத்து கிரகத்தின் மீது இடித்துக்கொள்ளவா போகிறது? அல்லது வானம்தான் தன் மீது மழை பெய்யும் பட்சத்தில் நகர்ந்துகொள்ளுமா?

இன்னொரு விஷயம், பூமியால் நகர முடியாது; உருண்டு போகத்தான் முடியும். அதுவும் யாராவது உருட்டி விட்டால்தான் முடியும். பூமியிலிருந்து வானத்தின் மீது மழை பெய்தால் அது ஒரு சாதனைதான். ஆனால் அது தானாக நடப்பது (நடந்தால்). அதற்காக யாரையும் வாழ்த்திப் பாராட்டு விழா நடத்த முடியாது. ஆனால் பூமியை உருட்டுவது உங்கள் தலையை நீங்களே கடித்துச் சாப்பிடும் அளவுக்கு சுலபம். அவ்வாறு உருட்டும்போது கடல், ஆறு, ஏரி, குட்டைகள், வாழைப்பழத் தோல்கள் இல்லாத இடமாகப் பார்த்து கையை வைத்து உருட்டினால்தான் வழுக்காது. கை வைக்கும் இடத்தில் முட்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஜாதிக் கலவரம், மதக் கலவரம் எதுவும் சமீபத்தில் நடந்திராத இடமாகக் கை வைக்கவேண்டும். இல்லையென்றால் சோடா பாட்டில் துண்டுகள் கையைக் குத்திக் கிழித்துவிடும். கை வைக்கும் இடத்தில் அணையாத சிகரெட் துண்டுகள், மின்சாரக் கம்பிகள் இருக்கக் கூடாது. ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் பூமியை உருட்ட முயற்சிக்கும்போது பெரிய விண்கல் ஏதாவது உங்கள் முதுகைக் குறி வைத்து சீறிப் பாய்ந்து வந்தால் பயந்து நகர்ந்துகொள்ளாதீர்கள். நீங்கள் நகர்ந்தால் அது பூமியின் மீது விழுந்து பெருத்த உயிர்ச் சேதம், பொருட்சேதம் விளையும். விண்கல் பட்டு நீங்கள் செத்தால் பரவாயில்லை. விண்கல் பட்டு சாகும் பெருமை எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? அதுவும் பூமிக்காக உயிர்த் தியாகம் செய்யும் பாக்கியம்தான் எத்தனை பேருக்கு வாய்க்கிறது? அப்படி ஒன்று நடக்கவிருந்து நீங்கள் உயிர்த் தியாகம் செய்துவிட்டால் உங்களுக்கு அந்தரத்தில் சிலை எழுப்ப நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் இத்தனையும் பூமி மழைக்கு பயந்தால்தானே?

பூமி உருவாகி பில்லியன் வருடங்களில் பூமி மழைக்கு பயந்து நகர்ந்ததாக வரலாறு உண்டா? நியூட்டன் வந்தார், எயின்ஸ்டீன் வந்தார், ஹாக்கிங் வந்தார். எவனுமே பூமி நகர்ந்ததாகச் சொல்லவில்லையே? அதனால் பூமி நகராது என்றே நம்புவோம். பூமி நகருமென்று நிரூபிக்கிறேன் பேர்வழி என்று எவனாவது வந்தால் அவனைக் கொன்று புதைத்துவிட்டுத் தலைகுளிப்போம். பூமி இது வரை நகராததால் இனிமேலும் நகராது என்று நம்பிக்கை வைப்போம். நம்பிக்கையில்தானே உலகமே இயங்குகிறது? ஆபீசுக்குப் போகும்போதே பஸ் சக்கரத்துக்கு அடியில் தலை மாட்டிக்கொண்டு நசுங்கி மண்டையைப் போட மாட்டோம் என்ற நம்பிக்கையில்தானே தக்காளி சாதம் டிஃபன் கட்டிக்கொண்டு போகிறீர்கள்? உங்கள் கர்ப்ப மனைவியின் வயிற்றில் ஒரு பழைய காலத்து மர அலமாரி பிறக்காது என்ற நம்பிக்கையில்தானே சீமந்தம் கொண்டாடுகிறீர்கள்? அப்படி எல்லாம் நடக்காது என்றா சொல்கிறீர்கள்? இது வரை அப்படி நடந்ததில்லை என்றால் இனிமேல் அப்படி நடக்கவே நடக்காது என்று அர்த்தமா? பிறந்து சில மாதங்கள் வரை நடக்காமலிருந்து, பிறகு நீங்கள் நடை பழகியதில்லையா?

வயதான காலத்தில் நடமாட முடியாமல் நன்றாக அவதிப்படப் போகிறீர்கள். உங்கள் மகன், மருமகள் ஆபீசுக்குப் போய்விடுவார்கள். மகள் கல்யாணமாகிப் போய்விடுவாள். பேரக் குழந்தைகள் ஸ்கூல் விட்டதும் கிரிக்கெட் ஆடப் போய்விடுவார்கள். மனைவியை இழந்து நீங்கள் தனிமையில் வாடி இரவு வராதா, கட்டையை சாய்க்க மாட்டோமா என்று ஏங்குவீர்கள். பொழுது போக்க பேப்பர் படிக்கலாமென்றால் கூட உங்களுக்குக் கண் சரிவரத் தெரியாது. தெரிந்தாலும் பேப்பரில் வெட்டு, குத்து, கொலை, தந்தையே மகளைக் கற்பழித்த செய்திகள்தான் படிப்பீர்கள்.

ஒரு நாள் விடிகாலையில் பால் வாங்கப் போகும்போது மரணத்தைப் பற்றி யோசிப்பீர்கள். பார்த்துக்கொண்டே இருங்கள், உங்கள் வாழ்க்கையின் கடைசி காலத்தில் உங்கள் சாவுதான் ஹீரோ. நீங்கள்தான் ஹீரோயின். ஹீரோவை வெறுக்கும், கண்டு நடுங்கும் ஹீரோயின். ஆனால் உங்கள் ரெண்டு பேருக்கும் கடைசியில் கல்யாணம் நிச்சயம் உண்டு. முகூர்த்தத் தேதி தெரியாததால் அழைப்பிதழ் அச்சடிக்க முடியாது, அவ்வளவுதான். உங்களுக்குக் கொள்ளி வைத்த பிறகு மகன்கள் ஆகப் போகிற செலவைப் பற்றிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஏழாவது நாள் சமையல் சரியில்லை என்று சமையல்காரன் காதில் விழாதபடி மனைவியிடம் முணுமுணுப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் பூமி நகராது போனால்தான். தவறு, பூமி நகராது. உருளத்தான் செய்யும். அதுவும் யாராவது உருட்டிவிட்டால்தான். பூமியை உருட்டும் அளவு தெம்பு யாருக்கும் இங்கே இல்லை. வேறு எங்கேயும் கூட இல்லை. உண்மை என்னவென்றால், பூமியை உருட்டிக்கொண்டு போக முடியாது. மழை பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்யாது. அதனால்தானோ என்னவோ, நீர்க்குமிழிக்குள் சிறைபட்ட புகையின் உலகம் கடித்துப் போட்ட வடைகளால் ஆனது. ஜாக்கிரதை – இங்கே எலித் தொல்லை அதிகம்.

Make a Comment

Make a Comment: ( 5 so far )

blockquote and a tags work here.

5 Responses to “வாழ்க்கையின் அர்த்தம்… (கதை)”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

நல்லாயிருக்கு ;-)

எங்க பிரசுரம் ஆச்சு.

நன்றி. பன்முகம் என்ற பத்திரிகையில்.

மழை என்ன வளி மண்டலத்துக்கு வெளியில் இருந்தா வருகிறது ?

ஐயன்மீர், இது போயம் இல்லை என்றாலும் இதற்கும் பொயட்டிக் ஜஸ்டிஸ் அப்ளை ஆகும். என் படைப்புகளில் லாஜிக் பார்த்தல் இலமே.

கதை எனக்கு ஓ.எச்.டி
தடதடவென்று ஓடாமல் படிக்க முடியும்போது படித்துப் பார்க்க வேண்டும் ;-)


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,524 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...